வவுனியாவில் 14 வயது சிறுவன் மாயம்! – கண்டுபிடித்துத் தருமாறு தாயார் கண்ணீர் மல்கக் கோரிக்கை.
வவுனியா, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல்போயுள்ளார் என்று வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, கணேசபுரம் 7 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்தவரும், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவருமான தி. லதுர்சன் (வயது 14) என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
நேற்று சனிக்கிழமை மதியம் 2:30 மணியளவில், தனது தாயிடம் சிகையலங்கார நிலையத்துக்குச் செல்வதற்காகப் பணம் பெற்றுச் சென்ற சிறுவன், இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள், அயலவர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடியும் சிறுவன் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, சிறுவனின் தாய் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்தார். பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேற்படி சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால், தனது தொலைபேசி இலக்கங்களான 076 8644938 அல்லது 077 2432175 ஆகியவற்றுக்குத் தொடர்புகொண்டு உதவுமாறு தாயார் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
