லங்கா சதொச வாகன முறைகேடு வழக்கு: ஜோன்ஸ்டனின் இரு புதல்வர்கள் உள்ளிட்ட நால்வருக்குப் பிணை!
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இரு புதல்வர்கள் உள்ளிட்ட நால்வர் இன்று நீர்கொழும்பு மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜோஹான் பெர்னாண்டோ (ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மூத்த மகன்), ஜெரோம் பெர்னாண்டோ (ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இளைய மகன்), லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர், லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக, லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே, இன்று நால்வர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
