சாகசம் அல்ல, சாவு விளையாட்டு: போதையில் ஓட்டோ சாகசத்தில் ஈடுபட்ட இருவர் சமூக வலைத்தள வீடியோ மூலம் மடக்கிப் பிடிப்பு!

கம்பஹா மாவட்டம், வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஓட்டோ ஒன்றில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட இருவர், சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நெடுங்கமுவ முதல் மீகஹவத்த வரையான பிரதான வீதியில் இந்த ஆபத்தான சாகசச் செயல் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, பொலிஸ் தொழில்நுட்பக் குழுவினர் அதனை ஆய்வு செய்து விவரங்களைக் கண்டறிந்தனர்.

பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் வெலிவேரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, ஓட்டோவின் சாரதி (வயது 22) மற்றும் அதன் உரிமையாளர் (வயது 23) ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

பொலிஸாரைக் கண்டதும் இவர்கள் இருவரும் தப்பியோட முயன்றுள்ளனர். எனினும், இவர்கள் இருவரும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓட்டோவின் உரிமையாளர் கஞ்சா பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓட்டோவின் சாரதி சம்பவத்தின்போது போதை மாத்திரைகளை உட்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சட்டவிரோதச் செயலை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபருக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

“வீதிகளில் பொலிஸார் இல்லாத சந்தர்ப்பங்களிலும், இவ்வாறான தகவல்கள் மூலம் குற்றவாளிகளை இனங்கண்டு சட்டத்தை நிலைநாட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் ‘கொலை முயற்சிக்கு இணையான குற்றம்’ உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.