ஓராண்டு தடுப்புக்காவலுக்குப் பின் நீதிமன்றத்தில் பிள்ளையான் ஆஜர்! – அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் உத்தரவு.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ஓராண்டு காலத் தடுப்புக்காவல் விசாரணைக்குப் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் சுப்பிரமணியம் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். அன்று முதல் ஓராண்டு காலமாக அவர் சி.ஐ.டி.யினரின் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.

தடுப்புக் காவல் காலம் முடிவடைந்த நிலையில், இன்று பிற்பகல் 2.10 மணியளவில் அவர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2006 ஆம் ஆண்டே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், சுமார் 19 வருடங்களின் பின்னரே இந்த விவகாரத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவும் பிள்ளையான் மற்றும் அவரது தரப்பினரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அண்மைக்காலமாகத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.