நிலக்கரி ஊழலுக்குப் பின்னால் ஜனாதிபதி அநுரவா? – நாமல் பகிரங்கக் குற்றச்சாட்டு.
“நிலக்கரி ஊழலில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுப்பாரானால், இந்த ஊழலில் ஜனாதிபதிக்கும் நேரடித் தொடர்பு உண்டு என்றே அர்த்தம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, நிலக்கரி ஊழலில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதை நாம் அனைவரும் அவதானிக்கின்றோம். ஜனாதிபதியின் ஒவ்வொரு கூற்றும், அவரது நடத்தைகளும் ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசின் நடவடிக்கைகளும், இந்த நிலக்கரி ஊழலுக்குப் பின்னால் ஜனாதிபதியே இருக்கின்றார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நபர், ஜனாதிபதி அநுரகுமார விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் அவராலேயே அமைச்சுக்கு அழைத்து வரப்பட்டவராவார். அந்த நபர் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்தகைய ஒருவரை மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்கி, அவர் கொண்டு வந்த தரமற்ற நிலக்கரியைப் பாதுகாப்பாரானால், இது ஜனாதிபதியின் நேரடித் தலையீட்டுடன் நடக்கும் ஊழலாகும்.
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தமக்கு நெருக்கமானவர்கள் செய்யும் ஊழல்களை மறைக்க முற்படுகின்றனர். தரமற்ற நிலக்கரி விநியோகம் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு ஜனாதிபதி பதில் சொல்லியே ஆக வேண்டும்.” – என்றார்.
