எனது கைது சட்டவிரோதமானது! – மேன்முறையீட்டு நீதிமன்றில் சுரேஷ் சலே ரிட் மனு தாக்கல்.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) சுரேஷ் சலே, தான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், அண்மையில் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தனது கைது மற்றும் தடுத்து வைப்பு நடவடிக்கைகள் அடிப்படைச் சட்டக் கோட்பாடுகளுக்கு முரணானது என்று அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, அருட்தந்தை ரோஹன் சில்வா, சட்டமா அதிபர் ஆகிய தரப்பினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

தன்னைத் தடுத்து வைத்துள்ள உத்தரவை வலுவற்றதாக்குமாறும், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தக் கைது நடவடிக்கையிலிருந்து தனக்கு நிவாரணம் வழங்குமாறும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு எதிர்வரும் நாள்களில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.