அனோஜனின் உயிரைப் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – அவரின் பெற்றோரிடம் ஜனாதிபதி நேரில் உறுதி.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனின் பெற்றோர் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
சிவராசா அனோஜனின் தற்போதைய இக்கட்டான நிலைமை குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்த அவரது பெற்றோர், உடனடியாகத் தலையிட்டுத் தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்தனர்.
பெற்றோரின் கோரிக்கையைக் கவனமுடன் செவிமடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொள்வதற்காக அரசு இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது என்றும், அதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் உரிய தலையீடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூலக் கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிடுகையில், அனோஜன் தொடர்பான சம்பவம் குறித்து சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக அமைச்சு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருகின்றது என்றும், சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகள் ஊடாக அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் சிவராசா அனோஜனின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.






