ஹட்டன் சிங்கமலைக் காட்டில் வழிதவறிய நெதர்லாந்து மாணவி பொலிஸாரால் மீட்பு!
ஹட்டன், சிங்கமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் சிக்கித்தவித்த 20 வயதுடைய நெதர்லாந்து நாட்டு மாணவி ஒருவரை ஹட்டன் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை குறித்து மேலும் தெரியவருவதாவது:-
நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் பகுதியைச் சேர்ந்த லூனா என்ற மாணவி, ருகுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்துள்ளார். கடந்த 4ஆம் திகதி ஹட்டன் பகுதிக்கு வருகை தந்த அவர், நேற்று காலை சிங்கமலை வனப்பகுதிக்குத் தனியாக உலாச் சென்றுள்ளார். இதன்போது, அடர்ந்த காட்டுப்பகுதியில் பாதையைத் தேடிய அவர், வழிதவறி மலை உச்சிக்குச் சென்று அங்கேயே சிக்கிக்கொண்டார்.
மாணவியை ஒருங்கிணைக்கும் அதிகாரி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. ஹட்டன் பொலிஸ் குற்றத்தடுப்புபி பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த டி சில்வா தலைமையிலான குழுவினர் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் வனப்பகுதிக்குள் தேடுதலை நடத்தினர்.
வனப்பகுதியின் மலை உச்சிக்குச் சென்ற பொலிஸார், அங்கிருந்த பாறை ஒன்றின் மேல் சிக்கியிருந்த மாணவியைக் கண்டுபிடித்துப் பாதுகாப்பாகக் கீழே அழைத்து வந்தனர். இந்த மீட்பு நடவடிக்கையில் பொலிஸ் சார்ஜன்ட்களான பாலசூரிய (8824), சிறி (39127) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மதுஷான் (89877) ஆகியோர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
மீட்கப்பட்ட மாணவி தற்போது பாதுகாப்பாக உள்ளார் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
