மின்வெட்டால் செங்கலடியில் யானை அட்டகாசம் அதிகரிப்பு.

நாட்டில் நிலவும் மின்வெட்டு காரணமாகக் கிராமப்புறங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக மட்டக்களப்பு, செங்கலடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் சபையில் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மின்சாரத் தடையால் கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் கடும் இருள் நிலவுகின்றது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி வரும் காட்டு யானைகளின் அட்டகாசம் செங்கலடி போன்ற பகுதிகளில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் வாழ்வதுடன் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது குறித்து அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சஹ்ரான் காசிம் என்பவர் ஒரு கருவி மட்டுமே. அவரைப் பின்னால் இருந்து இயக்கிய முதலாம் மட்ட சூத்திரதாரிகள் யார் என்பதை அரசு நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

எரிபொருள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டால் கல்வி, விவசாயம், சுகாதாரம் என அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியிலும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாணவன் திருக்குமரன் (கணிதம்) மற்றும் காத்தான்குடி மாணவன் பர்தான் (வணிகம்) ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளமை பாராட்டுக்குரியது.

விவசாயிகளுக்குத் தேவையான உர மானியம் மற்றும் எரிபொருள் நிவாரணங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன், எரிபொருள் மற்றும் உரத்தைப் பதுக்கி வைத்து இலாபம் ஈட்டும் கறுப்புச் சந்தை வியாபாரிகளுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மட்டக்களப்பு, நாவற்குடா உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது இளைய சமூகத்தைச் சீரழிக்கும் இந்தப் போதைப்பொருள் மாபியாவை ஒழிக்கப் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.