பெற்ற மகனையே கொன்ற தாய்! புனேயை உலுக்கிய கொடூரக் கொலை

புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ரஞ்சன்காவ் எம்.ஐ.டி.சி. பகுதியை சேர்ந்த பூஜா பவார் (வயது22) என்பவரின் கணவர், கடந்த மார்ச் மாதம் தனது மனைவியையும் 11 மாத ஆண் குழந்தையையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் தாய்-மகனை தேடிவந்தனர், இதில் கடந்த 5-ந்தேதி ஜம்புட் கிராமத்தில் அந்தப்பெண் மட்டும் தனியாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவரிடம் குழந்தையை பற்றி கேட்டபோது, “குழந்தை தவறி கீழே விழுந்து இறந்துவிட்டது. பயத்தில் உடலை பையில் கட்டி கிணற்றில் வீசிவிட்டேன்” என்று கூறியுள்ளார். ஆனால், பூஜா பவாரின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பூஜா பவார் ஒப்புக் கொண்ட உண்மைகள் நெஞ்சை பதற வைத்தன.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனது கணவரை விட்டுவிட்டு வேறொரு திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அதற்கு எனது 11 மாத குழந்தை இடையூறாக இருந்தது. மேலும் குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரத்தில் சம்பவத்தன்று குழந்தையின் தலையை துணி துவைக்கும் கல்லில் ஓங்கி மோதி கொலை செய்தேன். பின்னர் உடலை ஒரு பையில் திணித்து விவசாய கிணற்றில் வீசிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தப்பெண் காட்டிய கிணற்றில் இருந்து குழந்தையின் உடலை அழுகிய நிலையில் மீட்டனர். இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பூஜா பவாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.