மருந்தாளர் இன்றித் திணறும் கிளிநொச்சி வைத்தியசாலை – நோயாளிகள் பெரும் அவதி.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் பாரிய மருந்தாளர் பற்றாக்குறையால், சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன், மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்துப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்ததாவது:-

கிளிநொச்சி மாவட்ட மக்கள் மாத்திரமன்றி, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்களும் தமது பிரதான சிகிச்சைத் தேவைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையையே நம்பியுள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இந்த வைத்தியசாலையில், போதியளவு மருந்தாளர்கள் நியமிக்கப்படாதது கவலைக்குரிய விடயமாகும்.

வைத்தியசாலையில் நிலவும் இந்தப் பணியாளர் பற்றாக்குறை குறித்துத் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்குப் பலமுறை சுட்டிக்காட்டியும், இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து வைத்தியரைப் பார்த்த பின்னர், மருந்தகத்தில் மருந்துகளைப் பெறுவதற்காக மீண்டும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக நோயாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனியார் மருந்தகங்களில் மருந்துகளைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் உள்ள ஏழை மக்கள், அரச வைத்தியசாலையையும் நம்பியே உள்ளனர். எனவே, மக்களின் சுகாதாரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, நிலவும் மருந்தாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சுகாதாரத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.