மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு! – வீதியின் குறுக்கே நாய் பாய்ந்ததால் விபரீதம்.
பதுளை, கிராந்துருக்கோட்டையில் மஹியங்கனை – தெஹியத்தகண்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று மஹியங்கனை வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நாய் ஒன்று வீதியின் குறுக்கே பாய்ந்துள்ளது. இதன்போது நாயுடன் மோதிய மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரம் ஒன்றில் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த பெண் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு கிராந்துருக்கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 55 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் பயணித்த பெண் பலத்த காயங்களுடன் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து கிராந்துருக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
