என்.டி.பி. வங்கி மோசடி குறித்து விசாரிக்க சர்வதேச பொலிஸார் இலங்கைக்கு வருகை!

என்.டி.பி. வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் மெய்நிகர் பணம்பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அது குறித்து விசாரணை நடத்த சர்வதேச பொலிஸாரின் விசேட நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. பிரான்ஸின் லியோன் நகரில் உள்ள சர்வதேச பொலிஸ் தலைமையகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாரிய மோசடி தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் வங்கியின் தலைமையகத்திலுள்ள கொடுப்பனவு தீர்வைப் பிரிவின் உதவி முகாமையாளர் மற்றும் அவரது சகோதரரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதி மோசடியினால் வங்கியின் எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்கு மீதிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று என்.டி.பி. வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வங்கியின் வழமையான செயற்பாடுகள் மற்றும் சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, என்.டி.பி. வங்கியின் மூலதன அளவு மற்றும் நிதி திரவத்தன்மை தொடர்பான விகிதங்கள், இலங்கை மத்திய வங்கியின் குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளை விடவும் அதிக மட்டத்திலேயே காணப்படுகின்றன. எனவே, வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.