எஸ்.ரி.எவ். ஜீப் மோதி முதியவர் ஒருவர் சாவு! – மட்டக்களப்பில் சோகம்.

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரித்திச்சேனை சந்தியில் விசேட அதிரடிப்படையினரின் ஜீப் வாகனம் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில், 67 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் விசேட அதிரடிப்படையின் ஜீப் சாரதி வவுணதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கன்னங்குடா, புதுமண்டபத்தடி பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

கல்லடி விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுணதீவு, தாண்டியடி முகாம் நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம், பரித்திச்சேனை சந்தியில் எதிரே வந்த சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த முதியவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள விசேட அதிரடிப்படை சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.