இரு படகுகள் மோதி கோர விபத்து! மீனவர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு!! – மன்னார் கடலில் துயரம்.
மன்னார், வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.
இன்று அதிகாலை 4 மணியளவில் வங்காலைப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகள் இவ்வாறு விபத்துக்குள்ளாகின. வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் படகும், காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் படகுமே இவ்வாறு மோதியுள்ளன.

இவ்விபத்தின் போது இரு படகுகளும் பலத்த சேதமடைந்ததுடன், அதிலிருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். இதன்போது ஒரு மீனவர் கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில், சக மீனவர்கள் நீண்டநேரம் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பலனாக அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விபத்தில் காயமடைந்த வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மீனவர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடல் தொழிலுக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் மன்னார் மீனவ சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
