நீரில் மூழ்கி ஐவர் பரிதாப மரணம்! – புத்தாண்டு தினத்தில் சோகம்.

சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற நீர் விபத்துக்களில் சிக்கி ஐவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மகாவலி கங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், ஹபராதுவ கடலில் இரு இளைஞர்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

மகாவலி கங்கையில்
3 சகோதரர்கள் சாவு

திருகோணமலை, சேருநுவர, சோமாவதிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை மகிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

தமது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் இணைந்து கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போதே, இவர்கள் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர்.

புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு சுற்றுலாப் பயணிகள்
கடலில் மூழ்கி உயிரிழப்பு

இதேவேளை, காலி – ஹபராதுவ கடற்கரையில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பகுதியிலிருந்து காலிக்குச் சுற்றுலா வந்திருந்த 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இவர்களைப் பிரதேச மக்கள் மீட்டு கழுகல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.