புத்தாண்டு வாரக் கோரம்: ஆறு நாள்களில் மாத்திரம் 44 பேர் வீதி விபத்துகளில் பரிதாபப் பலி!
ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான ஆறு நாள்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 42 கோர விபத்துகளில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
வீதிகளில் மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை உயர்த்தியும், முச்சக்கர வண்டிகளை இரண்டு சக்கரங்களில் ஓட்டியும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்குப் பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு “ஹீரோ” ஆக முயல வேண்டாம் என்றும், இது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சேனாதீர சுட்டிக்காட்டினார்.
வீதி விதிமீறல்களைக் கண்காணிக்கப் பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் நாடியுள்ளனர். டேஷ் கமராக்கள் அல்லது அலைபேசிகளில் பதிவாகும் விதிமீறல் காணொளிகளைப் பொலிஸாருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த 23 காணொளிகளில் 11 சம்பவங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் நீதிமன்றிலும் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
விபத்து மரணங்கள்: கடந்த ஆண்டுடன் ஒப்பீடு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்து மரணங்கள் இம்முறை ஓரளவு குறைவடைந்துள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் 13, 14, 15 ஆகிய நாள்களில் 26 மரணங்கள் பதிவாகியிருந்தன.
இம்முறை அதே மூன்று நாள்களில் அந்த எண்ணிக்கை 19 ஆகக் குறைந்துள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக ஆறு நாள்களில் 44 பேர் உயிரிழந்துள்ளமை கவலையளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர்.
தெளிவற்ற முறையில் இலக்கத் தகடுகளை மாற்றியமைக்கும் வாகனங்களுக்கு 15,000 முதல் 25,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன், அதிக புகை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து தகவல் வழங்க 070 355 2525 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தைப் பொதுமக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராகவும், போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராகவும் சட்டத்தை மிகக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
