தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஐக்கிய முயற்சியை முறியடிக்காதீர்! – சங்கின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்.

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியல் சாசனத்திற்கு முன் வைக்கப்பட வேண்டிய பொதுத் தீர்வு ஆவணத்தை உருவாக்கும் கூட்டு நடவடிக்கையை தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வருகின்றது. அதேசமயம் இப்போது புதிதாக ‘ஈழத் தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச் சபை’ என்ற பெயரில் இன்னொரு குழு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆகவே, இத்தகையவற்றைத் தவிர்த்து, எல்லோரும் இணைந்து பயணிக்கின்ற தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினுடைய அந்த முயற்சிகளை முறியடிக்காமல் எல்லோரும் சேர்ந்து செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்கு சின்னக் கட்சியின்) பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் செயற்றிட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சியுடன் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றது என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“தமிழரசுக் கட்சியுடன் ஜனநாயகத் தமிழ்க் தேசியக் கூட்டணி தொடர்ந்து பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றது.

பொதுவான விடயங்களில் நாங்கள் ஒன்றுபட்டுச் செயற்படுவது தொடர்பிலும், தமிழ் மக்களுக்கு எதிராக அரசு கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்ப்பது மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பிலும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம்.

அத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது தொடர்பிலும் பேச்சுக்களை நடத்தி இருக்கின்றோம். இன்னும் இறுக்கமான கட்டமைப்பாக நாங்கள் தொடர்ந்து செயற்படுவது தொடர்பில் தமிழரசுக் கட்சி ஆராய்ந்து வருகின்றது. அது தொடர்பில் நாங்கள் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவோம்.

அதேவேளை புதிய அரசியல் சாசனத்துக்குத் தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினைக்கான தீர்வைத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வருகின்றது.

இப்பொழுது ஒரு புதிய ‘ஈழத் தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச்சபை’ என்ற பெயரில் இன்னொரு குழு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே இவற்றைத் தவிர்த்து எல்லோரும் இணைந்து பயணிக்கின்ற தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினுடைய அந்த முயற்சிகளை முறியடிக்காமல் எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும்.

அத்துடன் அரசு கொண்டுவரும் பௌத்த மேலாதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.