மது குடிக்க ஆயிரம் ரூபா தராத தாயை அடித்துக் கொன்ற மகன் சித்தாண்டியில் நேற்று பயங்கரம்; தப்பியோடிய சந்தேகநபர் கைது.
மட்டக்களப்பு, சித்தாண்டி பகுதியில் மதுபானம் அருந்துவதற்கு ஆயிரம் ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளிவிட்டுப் படுகொலை செய்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சித்தாண்டி 4ஆம் பிரிவு, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய குமாரசாமி வசந்தா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில், இவரது 19 வயதுடைய மகன் மதுபானம் அருந்துவதற்காகத் தாயிடம் 1000 ரூபா பணம் கேட்டுள்ளார்.
தாயார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியமையால் ஆத்திரமடைந்த மகன், தாயாரைப் பிடித்து ஆக்ரோஷமாகத் தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறித் தரையில் விழுந்த தாயின் தலை பலமாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தாயார் உயிரிழந்ததைக் கண்டதும் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சந்திவெளி பொலிஸார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்துத் தலைமறைவாக இருந்த சந்தேகநபரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த தாயின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதுப் பழக்கத்துக்கு அடிமையான மகனால் பெற்ற தாயே படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் மட்டக்களப்பு பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாகச் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
