இலங்கை ஜனாதிபதி – இந்திய உப ஜனாதிபதி சந்திப்பு: வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்துறைகளில் ஒத்துழைக்க இணக்கம்!

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய உப ஜனாதிபதியை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அன்புடன் வரவேற்றார். இந்திய உப ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலுக்குத் துணை ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக பின்வரும் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம் காணப்பட்டது.

பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்

வலுசக்தி பாதுகாப்பு, துறைமுக அபிவிருத்தி மற்றும் முதலீடுகளை அதிகரித்தல்.

மனிதவள மற்றும் தொழில்நுட்பம்

இந்தியாவின் தொழில்நுட்ப வெற்றிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையின் அரச துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளில் இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

மீனவர் பிரச்சினை

இரு நாடுகளின் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதன் அவசியம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் இந்திய வரவு – செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக ஜனாதிபதி நன்றியைத் தெரிவித்தார். மேலும், மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்ட வலுசக்தி நெருக்கடியின் போது, 38 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இந்தியா அவசரமாக வழங்கியதையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

“இந்திய – இலங்கை நட்புறவை மேலும் உயரிய நிலைக்குக் கொண்டு செல்வதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்” என்று இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அத்துடன், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய நிதியுதவியுடனான வீட்டுத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

இந்த உயர்மட்டச் சந்திப்பில் இந்தியத் தரப்பில் மத்திய இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரும், இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.