இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்திய உப ஜனாதிபதி இலங்கை வருகை!

இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய உப ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உத்தியோகபூர்வமாக வரவேற்றார். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இந்திய உப ஜனாதிபதி இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுகளை நடத்தினார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மலையகக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரைக் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் அவர் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார்.

அண்மைக் காலமாக இரு நாடுகளுக்கும் இடையே முன்னெடுக்கப்பட்டு வரும் உயர்மட்ட இராஜதந்திர உறவுகளின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்புகள் அமைந்துள்ளன.

தொடர்ந்து, இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளிச் சமூகத்தினரைச் சந்தித்த அவர், பம்பலப்பிட்டி கதிரேசன் கொயோல் மற்றும் ஹூனுப்பிட்டிய கங்காராம விகாரை ஆகியவற்றுக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

தனது விஜயத்தின் இரண்டாம் நாளான நாளை திங்கட்கிழமை, இந்திய உப ஜனாதிபதி நுவரெலியாவுக்குச் செல்லவுள்ளார். அங்கு இந்திய அரசின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளதுடன், மலையக மக்களுடனான சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

இறுதியாக, நுவரெலியா சீதா அம்மன் கோயிலில் வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர், இந்திய உப ஜனாதிபதி சி.பி.. இராதாகிருஷ்ணன் தனது இரண்டு நாள் விஜயத்தை நிறைவு செய்து நாளை மாலை இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.