மட்டக்குளியில் இளைஞரின் சடலம் மீட்பு! – கொலையா எனத் தீவிர விசாரணை.

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்குளி பகுதியில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு அருகிலுள்ள கால்வாயில் சடலம் ஒன்று காணப்படுகின்றது எனப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்த சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேற்படி இளைஞர் உயிரிழந்தமைக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், அந்த இளைஞர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்று சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

உயிரிழந்தவர் யார்? எவ்விதம் மரணமடைந்தார்? என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னரே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.