சதொச லொறி விவகாரம்: நான்கு மாதங்களின் பின் ஜோன்ஸ்டனுக்குப் பிணை.
லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி ஒன்றை, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எத்தனால் நிறுவனம் ஒன்றின் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு சுமார் 2.5 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மூத்த மகன் யோஹான் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
