வீட்டில் தனிமையில் இருந்த பெண் சித்திரவதை செய்து படுகொலை! – பலாங்கொடையில் பயங்கரம்.
பலாங்கொடை, பல்லேவெல பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர், மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த வீட்டுக்குச் சென்று மேற்கொண்ட தேடுதலின் போதே அப்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை மாலை பலாங்கொடை பிரதான நீதிவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் நேரில் சென்று ஆய்வுகளை நடத்தினர். அவர்களுடன் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு மற்றும் விரல் அடையாளப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து தடயங்களைச் சேகரித்தனர்.
கொலையாளியை அடையாளம் காண்பதற்காக இரத்தினபுரி பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவி பெறப்பட்டது. மோப்ப நாய் வீட்டைச் சுற்றியுள்ள சில தூரம் வரை ஓடிச் சென்ற போதிலும், சந்தேகநபரைத் துல்லியமாக அடையாளம் காண்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தேடுதல் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று வெள்ளிக்கிழமை பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றன.
இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
