தீர்வு எட்டப்படாத காரணத்தினாலேயே நெடுந்தீவு மக்கள் வீதியில் இறங்கினர்! – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை.
“நெடுந்தீவு மக்கள் தமது அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு எடுத்த பல முயற்சிகள் கைகூடாத நிலையில், அதன் இறுதி வெளிப்பாடாகவே வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தமது அத்தியாவசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரக்கோரி நெடுந்தீவில் மக்கள் முன்னெடுத்த போராட்டம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்னர், நெடுந்தீவு மக்கள் தமக்கான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பல்வேறு தரப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றும், சாதகமான சூழ்நிலை உருவாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே அவர்கள் ஒன்றிணைந்து கவனவீர்ப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்றும், இது அவர்களின் ஜனநாயக உரிமை என்றும் அவர் தெரிவித்தார்.
1990 களின் ஆரம்பத்தில் தீவகப் பகுதிகள் விடுவிக்கப்பட்ட போது, மக்கள் எதிர்கொண்ட துயரங்களை நினைவு கூர்ந்த அவர் மேலும் கூறியதாவது:-
“அன்று மக்கள் பட்டினியின் விளிம்பில் இருந்தபோது, எமது கட்சியே அங்கு சென்று அவர்களின் பாதுகாப்பையும் வாழ்வியலையும் உறுதிப்படுத்தியது.
எந்தவிதப் பழிவாங்கல்களும் உயிர் இழப்புகளும் இன்றி அமைதியான சூழலை நெடுந்தீவில் உருவாக்கினோம்.
நெடுந்தீவு மக்கள் ஒரு காய்ச்சல் வந்தால் கூட எமக்கே தொடர்புகொண்டு தீர்வுகளைப் பெற்று வந்தனர். ஆனால் தற்போது யாருடன் தொடர்புகொள்வது என்ற ஏதுநிலை இல்லாத இயலாமையே இந்தப் போராட்டத்துக்குக் காரணமாகியுள்ளது.
நெடுந்தீவு மக்கள் மற்றும் கால்நடைகள் எதிர்கொள்ளும் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு குறித்து, எமது கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் அண்மையில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துத் தெளிவுபடுத்தியுள்ளனர். இதற்கு ஆளுநர் சாதகமான பதிலை வழங்கியுள்ள போதிலும், நடைமுறையில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.” – என்றார்.
கடந்த காலங்களில் நெடுந்தீவு மக்களுக்காகத் தம்மால் முடிந்த அனைத்துச் சேவைகளையும் அர்ப்பணிப்புடன் செய்துள்ளதாகவும், அங்குள்ள மக்களுக்கு அது நன்கு தெரியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது மேலும் தெரிவித்தார்.
