போதைப்பொருள் வேட்டையில் நேற்று மாத்திரம் 874 பேர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளில் 874 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் நாடளாவிய ரீதியில் 851 விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருள்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 269 கிராம் ஹெரோயின், 776 கிராம் ஐஸ், 491 கிராம் கஞ்சா, ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 771 கஞ்சா செடிகள், 101 கிலோகிராம் 965 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 10 கிலோகிராம் 968 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 712 போதை மாத்திரைகள், 4 கிராம் மதனமோதகம் மற்றும் 343 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் அச்சுறுத்தலற்ற நாட்டை உருவாக்கும் நோக்கில் இந்தத் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.