நிதி மோசடிக்கு அதிகாரிகளின் அலட்சியமே பிரதான காரணம் – அமைச்சர் அநுர கருணாதிலக விளாசல்.

“சைபர் குற்றவாளிகளுக்குத் திறைசேரி மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டமையானது, அரச அதிகாரிகளின் கடுமையான பொறுப்பற்ற செயலாகும்” என்று துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிதி மோசடி விவகாரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

“குறித்த நிதி மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அதிகாரிகள் குறித்து ஏற்கனவே விசேட விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணைகளில் தவறிழைத்ததாகக் கண்டறியப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் விரிவான விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அடுத்தகட்டக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்பினர் மற்றும் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்கின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.