முடிவுக்கு வந்துவிட்டது அரசின் மக்கள் ஆணை – முன்னாள் எம்.பி. சஞ்சீவ எதிரிமான்ன காட்டம்.

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு எந்த நான்கு தூண்களின் மீது கட்டியெழுப்பப்பட்டதோ, அந்த அடிப்படை எதிர்பார்ப்புகள் அனைத்தும் இன்று தகர்ந்து போயுள்ளன” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத நவீன பொருளாதாரத் திட்டம் தங்களிடம் இருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசிடம், தற்போது எந்தவொரு புதிய வேலைத்திட்டமும் இல்லை.

பண்புள்ள அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாகக் கூறிவிட்டு, தற்போது ஜனாதிபதி உட்பட 160 பேரைக் கொண்ட அரச கட்டமைப்பு ஊழல் மற்றும் ஏமாற்று வழிகளையே பின்பற்றி வருகின்றது.

அரசு பதவியேற்று ஒன்றரை வருடங்கள் நெருங்கியுள்ள போதிலும், நாட்டில் எவ்வித சமூக அல்லது பொருளாதார முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன் நன்மைகள் மக்களைச் சென்றடையவில்லை.

அரசின் மீது மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போயுள்ளதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் ஆணை இப்போது காலாவதியாகி முடிவுக்கு வந்துவிட்டது.

அரசின் மக்கள் ஆணை செயலிழந்துவிட்ட போதிலும், அவர்களைத் தொடர்ந்தும் ஆதரிக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பினர் மாத்திரம் இன்னும் எஞ்சியிருக்கின்றனர்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.