நீதிமன்றத்தையே அதிர வைத்த சைபர் தாக்குதல்! ஆன்லைன் விசாரணையின் போது ஸ்கிரீன் ஷேர் செய்த மர்ம நபர்

புதுடெல்லி,

டெல்லி ஐகோட்டில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்துவது வழக்கம். நேற்று மட்டும் 180 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. வழக்கு ஒன்றை, வீடியோ காணொலி வாயிலாக தலைமை நீதிபதி தேவேந்திர குமார் மற்றும் நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோர் நேற்று விசாரித்தனர். கணினியுடன் இணைக்கப்பட்ட திரையில் வழக்குக்கு சம்பந்தப்பட்டவர்கள் தோன்றி சாட்சி அளித்தனர். அப்போது, திடீரென திரையில் சத்தமான மற்றும் இரைச்சலான இசையுடன் ஆபாச வீடியோக்கள் ஒளிபரப்பாகின. இதனால்அதிர்ச்சி அடைந்த நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக கணினி இணைப்பை துண்டித்தனர்.

சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் இணைக்கப்பட்ட போது, மறுபடியும் ஆபாச வீடியோ ஒளிபரப்பானது. விசாரணை நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கிய போது ‘உங்கள் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது’ என்ற குறிப்பு தோன்றியது. அடுத்தடுத்து ஏற்பட்ட இடையூறால் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடத்தப்பட்ட விசாரணை நிறுத்தப்பட்டது. இந்த சைபர் தாக்குதலால் டெல்லி ஐகோர்ட்டு நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. இது குறித்து, டெல்லி ஐகோர்ட்டு நிர்வாகம் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், நீதிமன்ற அமர்வில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் தன் திரையை பகிர்ந்து, ஆபாச படத்தை உள்ளடக்கத்தை இயக்கியது தெரியவந்துள்ளது. ஸ்ரீதர் சர்னோபத், ஷித்ஜீத் சிங் ஆகியோரின் பெயர்களில் கணக்குகள் இயங்கியதை அடுத்து, அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் சூழலில், டெல்லி ஐகோர்ட்டில் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல், பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களையும், கவலைகளையும் எழுப்பியுள்ளது. இனிவரும் காலங்களில், இது போன்ற விசாரணையின் போது கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளை ஏற்படுத்துவது குறித்து கோர்ட்டு நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.