என்.பி.பி. அரசை அசைக்க முடியாது! – வடக்கிலும் பேராதரவு என்று மே தின நிகழ்வில் அநுர சூளுரை.

எதிரணி உறுப்பினர்கள் ஐந்து, பத்து பேர் வீதிக்கு இறங்குவதால் தேசிய மக்கள் சக்தி அரசைக் கவிழ்த்துவிட முடியாது. இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாகும். எனவே, அடுத்த பல வருடங்களுக்கு அதனை அசைக்க முடியாது.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மலையக மக்களுக்குரிய காணி மற்றும் வீட்டுரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய பொறுப்பும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு உறுதியளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்குரிய பொறுப்பு எமக்கு உள்ளது. இந்த விடயத்தில் காணிப் பிரச்சினை உள்ளது.

அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அவ்வாறு தீர்த்து காணி உரிமை மற்றும் வீட்டு உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் அரசுதான் தேசிய மக்கள் சக்தி அரசாகும்.

இந்த மண்ணில் தாத்தா உழைத்து கஷ்டப்பட்டார், அம்மா கஷ்டப்பட்டார். எனவே, அவர்களின் பிள்ளைகள் மீள்வதற்குக் கல்விதான் சிறந்த வழி. அதற்குரிய வளங்களை, வசதிகளை நிச்சயம் நாம் வழங்குவோம். தமிழ் மொழிமூல ஆசிரியர்களுக்கு உள்ள பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்.

நாம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடமே ஆகின்றது. இந்த அரசை அசைக்க முடியாது. மக்கள் அரசு பக்கம் நின்கின்றனர். இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாகும். இந்நாட்டை படிப்படியாகக் கட்டியெழுப்புவோம். இதற்குரிய திட்டம் எம் வசம் உள்ளது.

வடக்கு, கிழக்கு, தெற்கு என எப்பகுதிக்குச் சென்றாலும் மக்கள் மத்தியில் எமக்குப் பேராதரவு உள்ளது. இது மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாகும்.

இந்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அதிகளவில் சிறைக்குச் செல்லும் வருடமாக 2026 அமையக்கூடும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.