“எமது நிலம் எமக்கு வேண்டும்!” – வலி. வடக்கில் இராணுவ பங்களா முன்பாக காணி உரிமையாளர்கள் நேற்று போராட்டம்.

வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் நேற்று இராணுவத்தினரின் கொமாண்டர்ஸ் பங்களா முன்பாகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாத காரணத்தால் இப்பகுதிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகின்றன.

தமது காணிகளை விடுவிக்கக் கோரி பல வருடங்களாகப் போராடி வரும் உரிமையாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே நேற்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்ட இடத்துக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போராட்டத்துக்குத் தனது பூரண ஆதரவைத் தெரிவித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதியுடன் நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.