இ.போ.ச. பஸ் மோதி 14 வயது மாணவி பரிதாப மரணம்!
மொனராகலை, வெல்லவாய – சிறிபுர பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஆர்.எம். சதிதி நிபுணிகா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
மேற்படி மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெஹெரயாய கங்காராம விகாரையிலுள்ள பௌத்த அறநெறிப் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வெல்லவாய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச.) சொந்தமான பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த தந்தையும் மகளும் உடனடியாக அந்தபானாகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
