விஜய்க்கு எமது நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பது வெட்கக்கேடு! – பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடும் சாடல்.

இந்தியாவின் மாநில அரசியல்வாதிகளுக்கு நாட்டின் தலைவர்கள் என்ற அந்தஸ்தை வழங்கி, எமது நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பது வெட்கக்கேடான செயல் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடுமையாகச் சாடியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள அக்கட்சியின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது நாட்டின் சில அரசியல் தலைவர்கள் சுயகௌரவத்தை மறந்து செயற்படுகின்றார்கள். ஒரு நாட்டின் தலைவர், மற்றொரு நாட்டின் தலைவருக்கே உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் நடிகர் விஜய்க்கு, எமது நாட்டுத் தலைவர்கள் ‘எக்ஸ்’ தளம் ஊடாகப் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்துத் தெரிவிக்கின்றனர். இது அவர்களின் மதியீனத்தையே காட்டுகின்றது.” – என்று தேரர் குறிப்பிட்டார்.

இந்திய அரசியல்வாதிகள் என்றால் எமது நாட்டுத் தலைவர்களுக்கு அத்தனை இனிப்பாக இருக்கின்றது எனக் கேலி செய்த அவர், மேலும் தெரிவித்ததாவது:-

“எமது நாட்டு மாகாண சபை அமைச்சர்களுக்கு இந்தியாவின் தலைவர்கள் எப்போதாவது இதுபோன்று வாழ்த்து அனுப்பியதுண்டா?

கச்சதீவு விவகாரத்தை மையப்படுத்தி, புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு ஏற்ப காய்நகர்த்தும் விஜய் போன்றவர்கள், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட அனுமதிக்க முடியாது.

விஜய் இந்தியாவின் ஒரு மாநிலத் தலைவரே தவிர, முழு இந்தியாவுக்கும் தலைவர் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்துக்குள் தெரிவிக்கும் கருத்துக்களைப் பொதுவெளியில் கூறினால், வீதியில் இறங்கி நடமாட முடியாத நிலையை மக்கள் ஏற்படுத்துவார்கள்.

இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.