கிழக்கு பல்கலையில் கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்து! நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 3 மாணவிகள் காயம்!!
மட்டக்களப்பு, கல்லடியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் கட்டடப் பகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில், நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இறுதி வருட மாணவிகள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவிகள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த கட்டடம் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் மேல் மாடித் திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், அதன் கீழ்ப் பகுதி மாத்திரம் நிர்மாணிக்கப்பட்ட நிலையில், கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய சூழலிலேயே மாணவர்கள் பாவனைக்காக இக்கட்டடம் திறந்து விடப்பட்டிருந்தது.
சம்பவ தினத்தன்று, இறுதி வருட மாணவிகள் கட்டடத்தினுள் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மேல்தளத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது. நடனத்தின் அதிர்வுகளைத் தாங்க முடியாமல் பலவீனமான நிலையில் இருந்த கட்டடப் பகுதி இடிந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இக்கட்டடத்தின் நிர்மாணத் தரம் தொடர்பாக ஏற்கனவே பல சர்ச்சைகள் எழுந்திருந்ததோடு, அதன் பொறியியலாளர் தனது பதவியை இராஜிநாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
