உள்நாட்டுத் துப்பாக்கியுடன் விவசாயி கைது!
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெருவெளி வயல் பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கி ஒன்றுடன் 41 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இரவு, கரடியனாறு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று இரவு 7.30 மணியளவில் பெருவெளி வயல் பகுதியிலுள்ள வாடி (கொட்டகை) ஒன்றைப் பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன்போது, அங்கு சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியை மீட்டதுடன், அங்கிருந்த சித்தாண்டிப் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய விவசாயி ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
