தற்கொலையா? திட்டமிட்ட படுகொலையா? – சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.

அரச திறைசேரி நிதி மோசடி மற்றும் ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து அரசு உடனடி மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதுல்கோட்டேயில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா இதனைத் தெரிவித்தார்.

முக்கிய ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கின்றமை தற்செயலானவையா அல்லது திட்டமிட்ட படுகொலைகளா என்ற கேள்வி எழுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திறைசேரி நிதி மோசடி குறித்து முறைப்பாடுகளை முன்வைத்த இந்த அதிகாரியின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா அல்லது மோசடிகளை மூடிமறைக்க நடந்த கொலையா என்பது குறித்து கண்டறியப்பட வேண்டும்.

சர்ச்சைக்குரிய ஏயார்பஸ் வழக்கில் பிரதான சாட்சியாளராக இருந்த கபில சந்திரசேனவின் மரணம் மர்மமாக உள்ளது. நீதிமன்றத்தில் உண்மைகள் வெளிவருவதைத் தடுக்க ஏதேனும் தரப்பினர் இதில் பின்னணியில் உள்ளனரா என விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்படும் திகதிகளை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிப்பதானது, நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசியல் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது.” – என்றும் அவர் சாடினார்.

“இவ்வாறான சூழல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்காது என்ற பயத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டலாம் அல்லது மர்மமான முறையில் கொலை செய்ய வழிவகுக்கலாம்” என்றும் அவர் எச்சரித்தார்.

தற்போதைய அரசில் உள்ள அமைச்சர்களில் பலர் 2005 ஆம் ஆண்டு ராஜபக்ஷவினரை ஆட்சிக்குக் கொண்டு வரப் பாடுபட்டவர்கள் என்பதை நினைவூட்டிய அவர், இந்த மோசடிகளுக்கும் அரசில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக நிலவுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

ஊழலுக்கு எதிராகத் தண்டனை வழங்குவதில் அரசுக்கு உண்மையான நோக்கம் இருக்குமானால், சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சுஜித் சஞ்சய பெரேரா இதன்போது வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.