இரண்டு பஸ்கள் மோதி கோர விபத்து! மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்!!
கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில், திக்வெல்ல – பொல்கஹமுல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை இப்பகுதியில் நிலவிய கடும் மழை மற்றும் மந்தமான காலநிலைக்கிடையே, பொல்கஹமுல்ல “மியாமி” ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
அம்பாந்தோட்டையிலிருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ்ஸும், கதிர்காமம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச.) சொந்தமான பஸ்ஸும் மோதியதிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு திக்வெல்ல மற்றும் அண்மையிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் மழை காரணமாக வீதி வழுக்கலாக இருந்தமையோ அல்லது வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையோ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




