பல்கலைக்குத் தெரிவாகியிருந்த மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபப் பலி! – பலத்த மழைக்கு மத்தியில் வேலைக்குச் சென்றபோது சோகம்.
காலியில் பெய்த கடும் மழைக்கு மத்தியில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர், மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சோகச் சம்பவம் பிடிகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:-
காலி, பிடிகல – பெலவத்தை வீதியின் கரவ்வ 15ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த பாதுகாப்பு வேலியில் பயங்கரமாக மோதியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் மேல் ஹேவெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஆவார்.
இவர் கடந்த ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று நிலவிய பலத்த மழைக்கு மத்தியிலும் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
