ஆசிரியர் இடமாற்றத்தில் வடக்கில் ‘மெகா’ ஊழல்! ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்..

வடக்கு மாகாணத்தில் இடமாற்றச் சபையின் விதிகளை மீறி, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்களைக் கண்டித்து, யாழ். ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன், “வடக்கு மாகாணக் கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசும், ஊழல் கல்வி அதிகாரிகளும் கைகோர்த்துள்ளனர்” என்று சாடினார்.

போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள்:-

சலுகை அரசியல்: செல்வாக்கு மிக்க ஆசிரியர்களை யாழ்ப்பாணத்திலேயே தொடர்ச்சியாகத் தங்கவைத்துவிட்டு, கஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றிய ஆசிரியர்களை மீண்டும் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிப் பழிவாங்குகின்றனர்.

ஆளுநரின் உடந்தை: இந்த முறைகேடுகள் குறித்து ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவித்தும், அவர் அரசின் நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதற்காக இந்த ஊழலுக்குத் துணை போகின்றார்.


கல்வி அழிப்பு: யாழ்ப்பாணத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் ஆங்கில மொழி மூலமாகக் கற்பிக்கும் ஆசிரியரை, அந்தப் பாடமே இல்லாத ஒரு வலயத்துக்கு இடமாற்றியுள்ளனர். இது திட்டமிட்ட கல்விச் சீரழிவாகும்.

“சேவையின் தேவை கருதிய இடமாற்றம்” என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் இந்த அநீதிக்கு எதிராக உரிய தீர்வு கிடைக்கும் வரை, தமது போராட்டங்கள் ஓயாது என ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆளுநர் நடந்துகொண்ட விதம், இந்த இடமாற்றத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை உறுதிப்படுத்துகின்றது என்றும் போராட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.