விமல் உட்பட 35 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை.
தேசிய போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகை நிகழ்வுகளுக்குத் திட்டமிட்டு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 35 பேர் கொண்ட குழுவினருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்றைய தேசிய போர் வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் பத்தரமுல்ல நாடாளுமன்ற விளையாட்டரங்க வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபி முன்பாகப் பிரதான நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான விசேட பாதுகாப்பு மற்றும் உத்தியோகபூர்வ ஒத்திகை நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஒத்திகை மற்றும் பிரதான நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான சுமார் 35 பேர் கொண்ட குழுவொன்று, எவ்வித அனுமதியுமின்றிப் பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைய முயன்றுள்ளது.
அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் கடமைகளுக்கும், இராணுவத்தினரின் ஒத்திகை நடவடிக்கைகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அவர்கள் அத்துமீறி போர் வீரர் நினைவுச் சின்ன வளாகத்துக்குள் செல்ல முற்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அங்கு நிலவிய பதற்றமான சூழலை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரின் அத்துமீறிய முயற்சியைத் தடுத்து நிறுத்தியதுடன், வளாகத்தில் இருந்த அனைவரையும் அதிரடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
அரச அதிகாரிகளின் கடமைகளுக்குப் பாதகம் விளைவித்தமை மற்றும் உரிய அனுமதியின்றி உயர் பாதுகாப்புப் பகுதிக்குள் நுழைய முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றினூடாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
