கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம் – அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் உயர்மட்டக் கூட்டம்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை தாமதமின்றி அழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் குறித்து இங்கு விசேடமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தச் சட்டத் திருத்தங்களின் இறுதிக் கட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, சட்டத் திருத்தத்துக்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவில் முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள் மற்றும் அதன் சட்டக் கட்டமைப்பு குறித்தும் தேசிய சபையின் முன்னிலையில் விளக்கமளிக்கப்பட்டது.

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை தாமதமின்றி அழிப்பதன் அவசியம் குறித்தும், அது தொடர்பான தேசிய சபையின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

எதிர்காலத்தில் அதற்குரிய புதிய திருத்தங்கள் சட்ட வரைஞர் திணைக்களத்துக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

அருட் தந்தை நிஷாந்த பெர்னாண்டோ, சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உட்பட பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.