தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு!

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது விவகாரம் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்கரிய கருத்துக்கள், அந்த வழக்கோடு தொடர்புடைய 15 வயது சிறுமியை நோக்கமாகக் கொண்டவை அல்ல என்று ‘சர்வஜன பலய’ கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகம விளக்கமளித்துள்ளார். அத்துடன், எற்பட்ட தவறான புரிதல்கள் குறித்து அவர் தனது வருத்தத்தைத் தெரிவித்து பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது நடவடிக்கை பாலியல் தொழிலாளி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது என்று திலும் அமுனுகம குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் ஒரு சிறுமி என ஊடகங்களில் வெளியான தகவல்களை அடுத்து, சிறுமியை இத்தகைய பதங்களால் விவரித்த திலும் அமுனுகமவுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்த விமற்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே திலும் அமுனுகம தனது புதிய விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“என்னுடைய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் முற்றிலும் திரிபுபடுத்தப்பட்ட முறையிலேயே பரப்பப்பட்டு வருகின்றன. நான் குறிப்பிட்ட அந்தத் தகவல், நிட்டம்புவ பகுதியில் நடந்த முற்றிலும் வேறொரு சம்பவத்தைப் பற்றி எனக்குக் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டதே தவிர, இந்த வழக்கோடு தொடர்புடைய சிறுமியைப் பற்றியது அல்ல.

எவ்வாறாயினும், ஏற்பட்ட தவறான புரிதல்கள் காரணமாக எனது அந்த அறிவிப்பானது பாதிக்கப்பட்ட சிறுமிக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ அல்லது சமூகத்தில் உள்ள வேறு எவருக்கோனும் மனவேதனையை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக நான் எனது ஆழந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று கூறியுள்ளார்.

மேலும், யாருக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை என்றும், தனது இரண்டு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் தான் ஒருபோதும் எவர் மீதும் சேறுபூசும் அரசியலிலோ அல்லது தனிநபர் தாக்குதல்களிலோ ஈடுபட்டதில்லை என்றும் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.