பஸிலை உடனே கைது செய்ய பிடியாணை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு மாத்தறை பிரதான நீதிவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று பகிரங்கப் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கின் விசாரணைக்காக அவர் இன்று ஆஜராகத் தவறிய நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில் பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பெறுமதிமிக்க நிலத்தை வாங்கியமை மற்றும் அதற்கான நிதி ஆதாரங்கள் தொடர்பான விவகாரத்தில், பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மாத்தறை நீதிமன்றத்தில் பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டியிருந்தது.

இருப்பினும், பஸில் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவர் தற்சமயம் உத்தியோகபூர்வமாக வெளிநாடு சென்று அங்கு மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்று வருகின்றமையால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என அவருடைய சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து விளக்கமளித்தனர்.

பிரதிவாதி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையையும் சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களையும் நீண்டநேரம் பரிசீலித்த மாத்தறை பிரதான நீதிவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க, அதனை நிராகரித்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறி வழக்கில் ஆஜராகத் தவறிய குற்றத்துக்காக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு, பிரதான நீதிவான் பிடியாணை பிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.