கடையில் தனியாக வாழ்ந்த வயோதிபத் தம்பதியினர் கூரிய ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிக்கொலை! – டிக்கோயாவில் பயங்கரம்; பொலிஸ் விசாரணை தீவிரம்.
டிக்கோயா நகரின் பிரதான வீதியில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிபத் தம்பதியினர், கூரிய ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டவர்கள் எஸ். காளிமுத்து சத்திவேல் (வயது 82) மற்றும் அவரது மனைவியான சகுந்தலாதேவி (வயது 82) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருகின்றனர். நீண்டகாலமாக இந்த இடத்திலேயே வியாபாரம் செய்து வந்த இந்த தம்பதியினர், அண்மைக்காலமாக கடையை மூடிவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கொழும்பிலிருந்து பிள்ளைகள் இவர்களுக்குத் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பிள்ளைகள், டிக்கோயாவிலுள்ள அக்கம் பக்கத்தினருக்குத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டுள்ளனர். இதனையடுத்து, அண்டை வீட்டார் அங்கு வந்து கடையைத் திறந்து பார்த்தபோதே தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
நேற்று மாலை இனந்தெரியாத நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து இவர்களைக் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என்று பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
படுகொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடியுள்ள அடையாளம் தெரியாத சந்தேகநபரைக் கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
