இலங்கையில் தீவிரமடையும் அனர்த்தம் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை! கேகாலை, இரத்தினபுரியில் ‘சிவப்பு’ அறிவிப்பு!!

இலங்கையில் நிலவி வரும் பலத்த மழையுடனான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேசங்களுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

அதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, அயகம, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு, குறித்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கைகள் (மட்டம் 3) விடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க மற்றும் பாதுக்க பிரதேசங்களுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேசத்துக்கும், களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, ஹொரண, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பிரதேசங்களுக்கும், கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேசத்துக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத, கலவானை, நிவித்திகல ஆகிய பிரதேசங்களுக்கும் இரண்டாம் கட்ட (மட்டம் 2 – அவதானம் செலுத்துமாறு) மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் மீரிகம மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் மத்துகம பிரதேசங்களுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேசத்துக்கும் முதலாம் கட்ட (மட்டம் 1 – விழிப்புடன் இருக்குமாறு) மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.