இலங்கையை மீட்டெடுக்க ரணிலிடம் ஆட்சியை ஒப்படைப்பதே ஒரே தீர்வு!

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் பொய்ப் பிரசாரங்கள் காரணமாக நாடு மீண்டும் கடுமையான டொலர் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன், நாட்டை மீட்டெடுக்க ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சியை ஒப்படைப்பதைத் தவிர வேறு மாற்று வழியில்லை என்று அபிமானி ஜன ஜய கட்சியின் தலைவர் பிரதீப் சார்லஸ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர் திருடுவதாகக் குற்றம் சாட்டி, வெளிநாட்டு ஊழியர்களை இலங்கைக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம் எனத் தடுத்த வசந்த சமரசிங்க போன்றவர்கள், இன்று 10 டொலர்களையாவது அனுப்புமாறு ஊடகங்களுக்கு முன்னால் கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று பிரதீப் சார்லஸ் சாடினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய வங்கியின் பிரதான திறைசேரியிலுள்ள டொலர்களுக்கே ஹேக்கர்கள் கைவைக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான சூழல் இன்று நாட்டில் நிலவுகின்றது. இதனால், வெளிநாட்டு ஊழியர்கள் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் பணத்தை ‘பெலவத்தை ஹேக்கர்கள்’ திருடிவிடுவார்களோ என்ற நியாயமான அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த உளவியல் ரீதியான பயமே நாட்டின் டொலர் வரத்து வீழ்ச்சியடைவதற்குக் பிரதான காரணமாகும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த காலத்தில் உகண்டாவில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியமை, மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைப்பதாகக் கூறியமை, ஜப்பான் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதாகக் கூறியமை உள்ளிட்ட பல பொய்களைச் சமூகமயப்படுத்தியுள்ளார். பொய் கூறுவதில் ஜனாதிபதிக்கு விருதுகளையே வழங்கலாம்.

கடந்த காலத்தில் அவர் கூறிய பொய்கள் அனைத்தும் இப்போது அவருக்கே வினையாக மாறியுள்ளதால், ஜனாதிபதி கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். அரசுக்கு இப்பிறவியிலேயே ‘திட்டதம்மவேதனீய’ கர்ம வினை பலன் கொடுத்துள்ளதால் இவர்களால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீள வேண்டுமாயின், நாடாளுமன்றில் உள்ள ஒரே ஒரு பட்டயக் கணக்கறிஞரான ரவி கருணாநாயக்கவிடம் உடனடியாக நிதி அமைச்சைப் பொறுப்பளிக்க வேண்டும்.

டொலர் நெருக்கடியிலிருந்தும் நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்பதை மக்கள் இப்போது உணர்ந்துள்ளதால், குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது ஒரு வருட காலத்துக்காவது நாட்டை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு மாற்று வழி இல்லை.” – என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கட்சியின் இளைஞர் விவகார செயலாளர் ரவீந்திர நிஸ்ஸங்க, தற்போதைய ஆட்சியாளர்களின் ஊழல், திருட்டுத்தனம் மற்றும் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே நாடு இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

வாகனங்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாலேயே டொலரின் மதிப்பு இந்தளவு உயர்ந்து பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்தது என்றும் அவர் விவரித்தார்.

“டொலர் நெருக்கடியால் புதிய தொழில்களைத் தொடங்க நினைத்தவர்கள் கைவிட்டுள்ள நிலையில், ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களும் தங்களது பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறவே திட்டமிடுகின்றார்கள்.

பொருளாதாரத்தைப் பற்றித் தெரியாத அறிவற்றவர்களை மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியமையால் அவர்கள் நாட்டை சீரழிகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஏனைய தரப்பினர் அநுரகுமாரவுடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கக் கூடாது.” – என்றும் அவர் எச்சரித்தார்.

நாடு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் பாதாளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில், அதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பாக மீட்டெடுத்தவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் ரவீந்திர நிஸ்ஸங்க தனது உரையில் மேலும் வலியுறுத்திக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.