யாழ்ப்பாணத்துக்கு கடத்த முயன்ற 22 மாடுகள் கிளிநொச்சியில் மீட்பு! அனுமதிப்பத்திரமின்றி கொடூரமான முறையில் பாரவூர்தியில் ஏற்றிச் சென்ற சாரதியும் கைது.
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எவ்வித அனுமதிப்பத்திரங்களும் இன்றி சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 22 மாடுகள் கிளிநொச்சி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து பொலிஸ் தரப்பிலிருந்து கிடைக்கப் பெற்ற விவரங்கள் வருமாறு:-
கிளிநொச்சி, முட்கொம்பன் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பாரவூர்தி ஒன்றில் பெருமளவிலான மாடுகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன என்று கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில், முகமாலைப் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த குறித்த பாரவூர்தியை மறித்துச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது, உரிய போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் ஏதுமின்றி, மிகவும் கொடூரமான முறையில் லொறியினுள் மறைத்து ஏற்றி வரப்பட்ட 22 மாடுகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
மாடுகளைச் சட்டவிரோதமாகக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் கீழ், லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரையும், மீட்கப்பட்ட 22 மாடுகளையும் நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும், மாடுகளின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கும் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
