வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் தனியார் பஸ்ஸும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக தனியார் பஸ்ஸும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், தனியார் பஸ்ஸின் நடத்துனர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் குறித்து பொலிஸார் வெளியிட்ட விவரங்கள் வருமாறு:-

ஆரையம்பதி பகுதியில் இருந்து பொலன்னறுவை – கதுருவெல நோக்கிப் பயணித்த தனியார் போக்குவரத்து பஸ்ஸும், வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிஸ்கட்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியும் சித்தாண்டி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதியின் பாதசாரிகள் கடவைக்கு (வெள்ளைக் கோட்டுப் பகுதி) அருகில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இரு வாகனங்களும் அதிவேகமாக மோதிக்கொண்டதில் வாகனங்களின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், பஸ் நடத்துனர், பஸ்ஸிக் பயணித்த பயணிகள் மற்றும் லொறியில் சென்றவர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சித்தாண்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பாகச் சந்திவெளி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், விபத்துக்குள்ளான வாகனங்களை வீதியிலிருந்து அகற்றும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.