டெல்லியில் கொடூரம்: பெற்ற மகளையே கொன்றுவிட்டு ‘குழந்தை கடத்தல்’ என நாடகமாடிய தந்தை கைது!

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், தனது 10 மாதக் குழந்தை கடத்தப்பட்டதாக பொலிசில் புகாரளித்தார் ஒருவர்.

விசாரணையில், திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று தெரியவந்துள்ளது!

குழந்தை கடத்தப்பட்டதாக புகாரளித்த தந்தை
புதுடெல்லியிலுள்ள Bhalswa Dairy என்னுமிடத்தைச் சேர்ந்தவர் தீபக் (25). தீபக்குக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை தான் குழந்தைக்கு பாலும் பிஸ்கட்டும் வாங்கச் சென்றதாகவும், திரும்பிவந்து பார்க்கும்போது குழந்தையைக் காணவில்லை என்றும், தன் மனைவியும் மூத்த மகளும் சுயநினைவின்றிக் கிடந்ததாகவும் பொலிசில் புகாரளித்தார் தீபக்.

அதைத் தொடர்ந்து CCTVகாட்சிகளை ஆராய்ந்த பொலிசார் சந்தேகத்துக்குரிய விதத்தில் எதுவும் கிடைக்காததால் மீண்டும் தீபக்கை விசாரித்துள்ளனர்.

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர் மீது பொலிசாரின் சந்தேகம் திரும்பியுள்ளது.

மேலதிக விசாரணையில், தான் ஒரு பள்ளியில் வேன் ஓட்டும் சாரதியாக பணி புரிவதாகவும், இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க தனக்கு வசதியில்லை என்றும், அதனால் தனது 10 மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் தீபக்.

தன் மனைவிக்கும் மூத்த மகளுக்கும் மயக்க மருந்துகொடுத்து, அவர்கள் மயங்கியதும், தன் இரண்டாவது குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார் தீபக்.

வீட்டிலுள்ள செப்டிக் டேங்குக்குள்ளிருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், தீபக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.