பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், கோவைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் சூர்யபிரசாந்த் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பக்ரீத் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை துடியலூர் சந்தை, ரத்தினபுரி மசூதி, உக்கடம், செல்வபுரம், கள்ளமேடு, குனியமுத்தூர், கோட்டைமேடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்பட உள்ளன. பொது இடங்களில் மாடுகளை வெட்டுவது சட்டவிரோதம். எனவே, இதுகுறித்து நான் கொடுத்த புகார் மனுவை பரிசீலிக்க போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் “கடந்த 2020-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், பொது இடங்களில் மாடுகளை வெட்டுவதற்கு தடைவிதித்துள்ளது. ஆடு, மாடுகளை வெட்ட அனுமதிக்கப்படும் இடத்தில்தான் அவற்றை வெட்ட வேண்டும் என்று 1976-ம் ஆண்டு பசுவதையை தடை செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மாடுகளை வெட்ட வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்டக்கூடாது.

மாடுகளை வெட்ட தடை
பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை விதிக்கிறோம். பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரும், டி.ஜி.பி., யும் உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.